Home செய்திகள் தேசிய செய்திகள் ஞானேஷ் குமாருக்கு எதிராக ‘இண்டி’ கூட்டணி நிகழ்ச்சி ஒத்திவைப்பு

ஞானேஷ் குமாருக்கு எதிராக ‘இண்டி’ கூட்டணி நிகழ்ச்சி ஒத்திவைப்பு

புதுடில்லி, அக். 31-
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, ‘இண்டி’ கூட்டணி சார்பில் நடத்தப்பட இருந்த அடையாள பொது பதவிநீக்க நடவடிக்கை நிகழ்ச்சி, கனமழை காரணமாக அக். 31-க்கு ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் மற்றும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை கண்டித்து, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி, டில்லியில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளைப் போன்று, அடையாள பொது பதவிநீக்க நிகழ்ச்சியை நடத்த கூட்டணி திட்டமிட்டிருந்தது. பொது இடத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், டில்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள காங்கிரஸ் தேசிய தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லப் புல்வெளியில் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள், கார்கே இல்லத்தில் கூடினர். எனினும், கனமழை காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. பார்லிமென்டில் தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் போன்றே, இந்த அடையாள நிகழ்ச்சியிலும் பதவிநீக்க தீர்மானம் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் தலைமை தாங்குவார். தீர்மானத்தை மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிவார். இதையடுத்து, கூட்டணி கட்சிகளின் பல்வேறு தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். இறுதியாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசுவார். நிகழ்ச்சி முடிந்த பின், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக ‘இண்டி’ கூட்டணி அறிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.