
டெல்லி, அக். 31-
ரூ.200 கோடி மோசடி மற்றும் பணம் பறித்தல் வழக்கில், சாட்சியாக ஆஜராக பாலிவுட் நடிகை நோரா பதேகிக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் நவம்பர் 2-ந்தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.டெல்லி ரோகிணி சிறையில் இருந்தபோது, அரசு உயர் அதிகாரி போல ஆள்மாறாட்டம் செய்து பணம் பறித்ததாக சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. முன்னாள் ரான்பாக்சி நிறுவன உரிமையாளர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் இருந்து, 2020 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.200 கோடியை அவர் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. சிறையில் இருந்த தனது கணவரை விடுதலை செய்ய உதவுவதாகக் கூறி சுகேஷ் பணம் பெற்றதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நடிகை நோரா பதேகியிடமும் டெல்லி போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர். சுகேஷ் சந்திரசேகருடனான தொடர்பு மற்றும் அவரது மனைவி லீனா மரியா பவுலோஸுடனான தொடர்பு குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. விசாரணையின்போது, சுகேஷ் சந்திரசேகருடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பு அவரது மனைவி மூலமாகவே ஏற்பட்டதாக நோரா பதேகி தெரிவித்திருந்தார். மேலும், 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றது குறித்தும் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோரா பதேகியை இந்த வழக்கில் சாட்சியாகப் பட்டியலிட்டுள்ளது. இதையடுத்து, நவம்பர் 2-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நோரா பதேகி குற்றம் சாட்டப்பட்டவராக அல்லாமல், சாட்சியாகவே ஆஜராக உள்ளார்.













