
சென்னை, அக். 31- தேனி மாவட்டச் சிறையில் கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளரைப் பணியிடைநீக்கம் செய்தும், சிறைத் துறை அலுவலரைப் பணியிட மாற்றம் செய்தும் தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தேனி மாவட்டச் சிறையில் 26.10.2026 அன்று இரவு அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு, தப்பிச் சென்ற 17 கைதிகளையும் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள், கண்காணிப்புப் பணிகளில் நிலவிய மெத்தனப்போக்கு மற்றும் பணியில் ஏற்பட்ட கவனக்குறைவு குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தேனி மாவட்டச் சிறையில் 06.08.2024 முதல் சிறைக் கண்காணிப்பாளர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனித்து வந்த துணைச் சிறை அலுவலர் ந. நாகேஸ்வரன், சிறைக் கைதிகள் மற்றும் பணியாளர்கள் மீதான கண்காணிப்பு, கட்டுப்பாட்டுப் பணிகளில் உரிய கவனம் செலுத்தத் தவறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி, அவர் 30.10.2026 முதல் மறு உத்தரவு வரும் வரை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சிறை நிர்வாகத்தில் கண்காணிப்பு, பொறுப்புடைமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், மதுரை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் ஆர். கிருஷ்ணராஜ், சேலம் மத்தியச் சிறைக் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.















