Home மாவட்டங்கள் சென்னை ரூ.30 அரிசிக்கு வரவேற்பில்லை: அன்புமணி

ரூ.30 அரிசிக்கு வரவேற்பில்லை: அன்புமணி

சென்னை, அக். 31-
வெளிச்சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.30 அரிசிக்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: 250 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசி, கடந்த 14 நாள்களில் 114.80 டன் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் அந்த அரிசிக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை என்பது தெரிகிறது. சென்னையில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 250 அங்காடிகளுக்கு 950 டன் அரிசி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதில் 114.80 டன் மட்டுமே விற்பனையாகியுள்ளது. அக்டோபர் 29-ஆம் தேதியுடன் திட்டம் தொடங்கி 14 நாள்கள் ஆன நிலையில், ஒரு அங்காடியில் நாளொன்றுக்கு சராசரியாக 33 கிலோ அரிசி மட்டுமே விற்பனையாகியுள்ளது. இது கிராமங்களில் உள்ள சாதாரண மளிகைக் கடைகளில் விற்பனையாகும் அளவைவிடக் குறைவு என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக நாளிதழ் செய்தி வெளியானதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். ரூ.30 அரிசி போதிய வரவேற்பைப் பெறாததற்கு அது தரமற்றதாக இருப்பதே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனியார் அரிசி ஆலைகளின் மொத்த உற்பத்தியில் 20 சதவீதத்தை குறைந்த விலையில் வாங்கி, நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க வேண்டும் என்று தாம் முதலில் வலியுறுத்தியதாகவும், ஆந்திராவில் இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அமுதம் அங்காடிகளுக்கான அரிசி தனியார் ஆலைகளில் இருந்து வாங்கப்படாமல், உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. நியாயவிலைக் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை சற்று மெருகூட்டி ரூ.30-க்கு விற்பனை செய்வதே திட்டத் தோல்விக்கு காரணம் என்றும் அன்புமணி கூறியுள்ளார்.