
புதுடெல்லி: அக். 31-
இந்திய கடற்படையை விரிவுபடுத்தும் நோக்கில், ரூ.40,000 கோடி மதிப்பில் 8 அதிநவீன போர்க்கப்பல்களை கட்டுவதற்கான பாதுகாப்புத் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தை கொல்கத்தாவைத் தளமாகக் கொண்ட கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) மற்றும் கோவாவில் உள்ள கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (ஜிஎஸ்எல்) ஆகிய இரண்டு முக்கிய பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இவ்விரு நிறுவனங்களுடனும் அரசு விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக கட்டப்படும் 8 போர்க்கப்பல்களும் அதிவேக மேற்பரப்புப் போர்க்கப்பல்களாக இருக்கும். அவற்றின் வேகம் சுமார் 30 நாட்ஸாக இருக்கும். முதல் போர்க்கப்பலை 2030-க்குள் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கட்டுமான கால அட்டவணையை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த 8 கப்பல்களும் இந்தியாவிலேயே கட்டப்பட உள்ளன. இதன் மூலம் உள்நாட்டு கப்பல் கட்டும் திறன்களுக்கு ஆதரவு கிடைப்பதுடன், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்திச் சூழலமைப்பும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்தப் போர்க்கப்பல்கள், பல்வேறு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவையாகவும், சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் வகையிலும், பல்திறன் கொண்ட தளங்களாகவும் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் இந்திய கடற்படையின் போர்த் தயார்நிலையையும் செயல்பாட்டு இருப்பையும் வலுப்படுத்தும் என்றும் அவர்கள் கூறினர்.













