Home மாவட்டங்கள் பெங்களூர் பிரதமர் பாதுகாப்பு ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு

பிரதமர் பாதுகாப்பு ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு

மைசூரு: நவ. 14-
கர்நாடகத்தில் மெட்ரோ ரெயில் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று பெங்களூரு வந்தார். அவருடன் பாதுகாவலர்களும் வந்திருந்தனர். பெங்களூருவில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மதிய வேளையில் பிரதமர் மோடியும் அவரது பாதுகாவலர்களும் 3 ஹெலிகாப்டர்களில் புறப்பட்டனர். அந்த 3 ஹெலிகாப்டர்களும் ராணுவத்துக்குச் சொந்தமான சாப்பர் ரக ஹெலிகாப்டர்கள் என்று கூறப்படுகிறது.
அவை மைசூருவில் உள்ள லலிதா மகால் ஹெலிபேடில் தரையிறங்கின. பின்னர், மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் மோடி மைசூருவில் இருந்து புறப்பட்டுச் சென்ற பிறகு, அவரும் பாதுகாவலர்களும் பயணம் செய்த 3 ஹெலிகாப்டர்களில் 2 ஹெலிகாப்டர்கள் மைசூருவில் இருந்து பெங்களூருவுக்குத் திரும்பின. ஆனால் ஒரு ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்படவில்லை. இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் லலிதா மகால் ஹெலிபேடிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரில்தான் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் யாரும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட ஹெலிகாப்டரைச் சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த ஹெலிகாப்டர் இன்று (சனிக்கிழமை) காலையில் மைசூருவில் இருந்து புறப்பட்டு, பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தை வந்தடையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.