Home மாவட்டங்கள் சென்னை சேலம் வனப்பகுதியில் பவாரியா கும்பல் ஊடுருவல்

சேலம் வனப்பகுதியில் பவாரியா கும்பல் ஊடுருவல்

சேலம்: நவ. 16-
சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வனவிலங்குகளை வேட்டையாடவும், குற்றச் செயல்களில் ஈடுபடவும் வடமாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கும்பல் ஊடுருவியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேட்டூர், கொளத்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள வனக் கிராமங்களில் காவல் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். அதில், கிராமங்கள், தோட்டத்து வீடுகள் அல்லது வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது முன்பின் அறிமுகமில்லாத புதிய நபர்கள் தங்கியிருந்தாலோ, சந்தேகத்திற்கிடமாக நடமாடினாலோ உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், வனப்பகுதியில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கத்துடன் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சுற்றித் திரிந்தாலும், உடனடியாக காவல்துறையினருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய நபர்களை பொதுமக்கள் நேரடியாக அணுகவோ, விசாரிக்கவோ கூடாது என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களை கொளத்தூர் காவல் ஆய்வாளர் மஞ்சுநாதனை 99767 11161 என்ற எண்ணிலும், கொளத்தூர் காவல் நிலையத்தை 94981 00997 என்ற எண்ணிலும், தனிப்பிரிவு காவலர் மணிகண்டனை 90805 82107 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். மேலும், அவசர உதவி எண்களான 100 அல்லது 112-ஐயும் பயன்படுத்தலாம். தகவல் தெரிவிக்கும் நபர்களின் ரகசியம் காக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. கொளத்தூர் வனப்பகுதியில் பவாரியா கும்பல் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, வனக் கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் காவல்துறையினருடன் இணைந்து வனத்துறையினரும் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.