
புதுடெல்லி, அக். 8-
ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் நுழைவதைச் சில ‘பெரும் பணக்காரர்கள்’ தடுப்பதாக, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.மஸ்க் தலைமையிலான தொலைத்தொடர்பு நிறுவனமான ஸ்டார்லிங்க், இந்தியாவில் தனது சேவைகளை வழங்க நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறது. எனினும், மத்திய அரசின் இறுதி ஒப்புதலைப் பெறுவதற்கான நடைமுறைகளை நிறைவு செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. இந்த நிலையில், எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பயனர் ஒருவர்,
இந்தியாவின் ஏராளமான கிராமங்களில் இன்னும் பிராட்பேண்ட் இணைப்பு இல்லாததால், அங்கு ஸ்டார்லிங்க் சேவை தேவைப்படுவதாகப் பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த மஸ்க், “துரதிர்ஷ்டவசமாக, இந்திய மக்கள் மீதான தங்களின் ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகச் சில பெரும் பணக்காரர்கள் எங்களைத் தடுக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை நீங்கள் யூகிக்கலாம்… இது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம்!” என்று பதிவிட்டார்.முன்தினம் இரவு எக்ஸ் சேனலில் பேசிய மஸ்க், தற்போதைய விலைகளைச் செலுத்த முடியாதவர்களுக்கும், இணைய இணைப்பு இல்லாதவர்களுக்கும் இந்தியாவில் ஸ்டார்லிங்க் அதிவேகமான, மலிவு விலை இணைய இணைப்பை வழங்கும் எனத் தெரிவித்திருந்தார். ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் ஏற்கெனவே 20 கேட்வே தளங்களை அமைத்துள்ளதாகவும், இந்தியப் பயனர்களின் தரவுகளை நாட்டுக்குள்ளேயே வைத்திருக்க பிரத்யேக பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகள் துணைத் தலைவர் லாரன் டிரேயர் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.













