Home செய்திகள் தேசிய செய்திகள் 3.5 கிலோ தங்க நகை திருட்டு புகார்: போலீஸார் அத்துமீறல்

3.5 கிலோ தங்க நகை திருட்டு புகார்: போலீஸார் அத்துமீறல்

புதுடெல்லி: அக். 7-
நகை திருட்டு குறித்து புகார் அளித்த நகைக்கடை உரிமையாளரிடம் போலீஸார் அத்துமீறியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் பி.சுந்தரராஜன், 2004-ம் ஆண்டு தனது கடையிலிருந்து 3.5 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டதாகப் புகார் அளித்தார். அப்போது போலீஸார் தன்னை மிரட்டி, துன்புறுத்தியதுடன், காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக பொய்யான புகார் அளித்ததாக எழுதி வாங்கியதாகவும், ரூ.5 லட்சம் மற்றும் 620 கிராம் வெள்ளிப் பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பான பத்திரிகைச் செய்தி அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. சுந்தரராஜன் துன்புறுத்தப்பட்டது உறுதியானதாகக் கூறிய ஆணையம், அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும், அந்தத் தொகையை காவல் கண்காணிப்பாளர் ஏ.பாரி, துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் துரைசாமி, உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோரிடமிருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ஏற்ற தமிழக அரசு, அரசாணை பிறப்பித்து, இழப்பீட்டுத் தொகையை உடனடியாக சுந்தரராஜனுக்கு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து ராமகிருஷ்ணன், துரைசாமி, ரமேஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், சம்பவத்தில் தொடர்பில்லாத தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக் கோரி ஏ.பாரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இழப்பீடு வழங்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை முழுமையாக ரத்து செய்தது.