
பெங்களூரு, நவ. 17-
பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்த வாலிபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் பெங்களூரு மாதாநாயகனஹள்ளி அருகே உள்ள ஹனுமந்த சாகராவில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் இந்துபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவன் குமார் (வயது 28). இவருக்கும் நாகமணி என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாகமணி தனது கணவர் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து வந்துவிட்டார். அதன் பின்னர் பவன் குமாரும், நாகமணியும் ராஜானுகுண்டே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாடகை வீடுகளில் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட நாகமணி, ஹனுமந்த சாகரா அருகே உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதையடுத்து பவன் குமார் அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, மீண்டும் தன்னுடன் வந்து வாழுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது செல்போனிலேயே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த பவன் குமார், தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பவன் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மாதாநாயகனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













