Home செய்திகள் தேசிய செய்திகள் சோனியா காந்தி சுயசரிதை நூல் வெளியீடு

சோனியா காந்தி சுயசரிதை நூல் வெளியீடு

புதுடெல்லி: நவ. 17-
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய “பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்” என்ற சுயசரிதையின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா டெல்லி ஐடிசி மவுரியா நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த நூல் கடந்த 10-ம் தேதி வெளியான நிலையில், விழாவில் தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட 7 மாநிலங்களின்
முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் சிவகுமார், கேரள முதல்வர் சதீசன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
முதல் வரிசையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். ராகுல் காந்திக்கு அருகே தமிழக முதல்வர் விஜய் அமர வைக்கப்பட்டார். பஞ்சாப் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான அமரிந்தர் சிங்கும் விழாவில் பங்கேற்றார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இணைந்து சுயசரிதை நூலை வெளியிட்டனர்.
விழாவில் சோனியா காந்தி பேசியதாவது: முன்னாள் பிரதமரும் தனது மாமியாருமான இந்திரா காந்தியைப் பார்த்து முதலில் அஞ்சி நடுங்கியதாகக் கூறினார். ராஜீவ் காந்தியும் சஞ்சய் காந்தியும் அவரை ‘மம்மி’ என்று அழைத்தபோதும், தாம் அவ்வாறு அழைக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். பின்னர் இந்திரா காந்தியுடன் நெருக்கம் ஏற்பட்டதால், அறியாமலேயே அவரை ‘மம்மி’ என்று அழைக்கத் தொடங்கியதாகக் கூறினார்.
தனது குடும்பம் குறித்து எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டதால், ராகுல், பிரியங்கா, தோழி மஞ்சுலிகா துபே ஆகியோரின் வற்புறுத்தலால் சுயசரிதை எழுதியதாகவும் தெரிவித்தார். ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும், 2004 மக்களவைத் தேர்தல் வெற்றி அனைத்தையும் மாற்றியதாகவும் சோனியா கூறினார்.