
வாஷிங்டன்: நவ. 17-
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நவம்பர் 19-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதில் அணு ஆயுதங்களைக் குறைப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், கனடா, தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 21 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பின் இரு நாள் உச்சி மாநாடு சீனாவின் குவாங்டாங் மாகாணம், ஷென்சென் நகரில் தொடங்குகிறது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டின் ஒரு பகுதியாகவே அமெரிக்க, ரஷ்ய, சீன அதிபர்களின் சந்திப்பு நடைபெறுகிறது.அமெரிக்கா, ரஷ்யாவிடம் தலா 5,000 அணு குண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சீனாவிடம் சுமார் 600 அணு குண்டுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 1996-ம் ஆண்டு விரிவான அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 191 நாடுகள் அதில் கையெழுத்திட்டுள்ளன. உக்ரைன் போர் காரணமாக அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம் என்று ரஷ்யா அடிக்கடி எச்சரித்து வருகிறது.
அமெரிக்கா-ரஷ்யா இடையே 2010-ம் ஆண்டு கையெழுத்தான புதிய அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம், உக்ரைன் போர் காரணமாக கடந்த பிப்ரவரியில் காலாவதியானது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் அணு ஆயுதப் போட்டி உருவாகும் என்று அஞ்சப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் போர்கள் நீடிக்கும் நிலையில், ஈரான் போர், உக்ரைன் போர் குறித்தும் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. தைவான் விவகாரத்தில் சீனா-அமெரிக்கா இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளும் விவாதிக்கப்பட உள்ளன.
சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச சவால்கள் குறித்து தலைவர்கள் ஆலோசிப்பார்கள் என்றும், அமெரிக்கா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை களைவது குறித்தும் பேசப்படும் என்றும் தெரிவித்தார்.













