Home மாவட்டங்கள் பெங்களூர் மரத்தில் கார் மோதி 2 மாணவிகள் பலி

மரத்தில் கார் மோதி 2 மாணவிகள் பலி

பெங்களூரு, நவ. 17-
வேகமாகச் சென்ற கார் மரத்தில் மோதியதில் சப்தகிரி கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் மாகடி தாலுகா குடேமாரனஹள்ளி ஹேண்ட் போஸ்ட் அருகே நடந்துள்ளது.
மாணவிகளான கானவி (வயது 20) மற்றும் வைஷ்ணவி (20) ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர். 2 வாலிபர்கள் மற்றும் 4 இளம்பெண்கள் என மொத்தம் 6 மாணவர்கள் இன்று அதிகாலை குணிகல்லுக்கு ஆக்டிவிட்டி கிளாஸ் (செயல்முறை வகுப்பு) செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது வேகமாகச் சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, குடேமாரனஹள்ளி ஹேண்ட் போஸ்ட் அருகே சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. விபத்தின் வேகத்தில் 2 மாணவிகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், காரில் இருந்த மற்ற 4 பேரும் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 2 பேர் விக்டோரியா ஆஸ்பத்திரியிலும், மற்ற 2 பேர் நெலமங்கலா ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தூக்க கலக்கத்தில் விபத்து:
கார் டிரைவருக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பது போலீஸ் விசாரணையில்தான் தெரியவரும்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குதூர் போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.