Home மாவட்டங்கள் பெங்களூர் காட்டு யானை தாக்கி விவசாயி பலி; என்.ஆர்.புரா பந்த்

காட்டு யானை தாக்கி விவசாயி பலி; என்.ஆர்.புரா பந்த்

சிக்கமகளூரு, நவ. 19–-
சிக்கமகளூரு மாவட்டத்தில் மனிதன் – காட்டு யானை மோதல் தொடர்ந்து வரும் நிலையில், என்.ஆர்.புரம் தாலுகா ஹென்னங்கி கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பலியானார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், காட்டு யானைகள் அட்டகாசத்திற்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தியும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என்.ஆர்.புரம் பந்த் (முழு அடைப்பு) போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹென்னங்கி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவர் நேற்று தனது தோட்டத்தில் இருந்தபோது, திடீரென அங்கு வந்த காட்டு யானை அவரைத் தாக்கியது. யானை தாக்கிய வேகத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால், மூடபாகிலு அருகே ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்திய கிராம மக்கள், உடலை மீண்டும் ஹென்னங்கி கிராமத்திற்கே திருப்பி அனுப்பினர். காட்டு யானைகள் தொல்லைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரை உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் எனக் கிராம மக்கள் பிடிவாதமாக உள்ளனர்.
நிரந்தரத் தீர்வுக்கு வலியுறுத்தல்:
வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் தங்கள் தோட்டம் மற்றும் வயல்களுக்கு அச்சமின்றிச் சென்று வரும் சூழல் உருவாக வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நடக்கும் என விவசாயிகள் ஆவேசம் தெரிவித்துள்ளனர்.
காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து என்.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
காட்டு யானை தாக்குதலுக்கு மேலும் ஒரு உயிர் பலியாகியுள்ளதால் உள்ளூர் மக்களின் கோபம் தீவிரமடைந்துள்ளது. பந்த் மற்றும் போராட்டங்கள் மூலம் அரசின் கவனத்தை ஈர்க்க அவர்கள் முயன்று வருகின்றனர்.