
டெல்லி, நவ. 21-
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் இருப்பிடத்தை நேரடியாகப் பகிரும் புதிய வசதியை அந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது. தற்போது, வாட்ஸ் அப்பில் ஒருவரின் இருப்பிடத்தைப் பகிர வேண்டுமானால், தனிப்பட்ட உரையாடல் வழியாகப் பகிர வேண்டும். அல்லது ஸ்டேட்டஸில் புகைப்படம், வீடியோ ஆகியவற்றுடன் இருப்பிடக் குறியீட்டைச் சேர்த்து பகிர வேண்டிய நிலை உள்ளது. இந்த நடைமுறையை எளிமையாக்கும் வகையில், புகைப்படம் அல்லது வீடியோ இல்லாமலேயே நேரடியாக ஸ்டேட்டஸில் இருப்பிடத்தைப் பகிரும் வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக உருவாக்கப்படும் இந்த வசதி, கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் வாட்ஸ் அப் பீட்டா பதிப்பு 2.26.45.8-ல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வசதி பயன்பாட்டுக்கு வந்தால், வாட்ஸ் அப்பின் ‘அப்டேட்ஸ்’ பகுதியில் ஸ்டேட்டஸ் உருவாக்கும்போது, தனியாக ‘லொகேஷன்’ என்ற தேர்வு இடம்பெறும். அதைத் தேர்வு செய்ததும், பயனரின் தற்போதைய இருப்பிடம் தானாகக் காட்டப்படும். அதைப் பகிர்வதற்கு முன்பு, காட்டப்படும் இருப்பிடத்தைச் சரிபார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கும். துல்லியமான இருப்பிடத்தைப் பகிர விரும்பாத பயனர்கள், சாதனத்தின் அமைப்புகள் வழியாகத் தோராயமான இருப்பிடத்தைப் பகிர முடியும். மேலும், தற்போதைய இடத்துக்குப் பதிலாக வேறொரு இடத்தையும் வரைபடத்தில் தேர்வு செய்து பகிரலாம். அதாவது, லைவ் லொகேஷனுக்கு மாற்றாக, விரும்பிய இடத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் வழங்கப்படும். பகிரப்படும் இருப்பிடம் வழக்கமான ஸ்டிக்கர் வடிவில் இல்லாமல், வரைபட அட்டையாகத் தோன்றும். அதில் பச்சை நிறக் குறியீட்டுடன் இடத்தின் பெயர் மற்றும் முழு முகவரி ஆகிய விவரங்கள் இடம்பெறும். இந்நிலையில், இந்த வசதி தற்போது உருவாக்கப் பணியில் மட்டுமே உள்ளது. பீட்டா சோதனையாளர்களுக்குக்கூட இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே, அனைத்து பயனர்களுக்கும் இது எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.














