
புதுடெல்லி, நவ. 21-
திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதி அளித்து 14 பெண்களை ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த முகமது மாசின், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், முகமது மாசின் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக போலீஸில் புகார் அளித்தார். மேலும், மாசின் தன்னை பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதுடன், ரூ.18 லட்சம் பெற்று மோசடி செய்ததாகவும் அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, மாசின் இதே முறையில் மேலும் 13 பெண்களைத் திருமண ஆசை காட்டி ஏமாற்றி, அவர்களிடமிருந்து பணம் பறித்ததும், அந்தரங்க காணொலிகளைப் பதிவு செய்து மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்தபோது, மாசின் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார். அவரைக் கண்டுபிடித்து கைது செய்ய சிபிஐ, மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உதவியை மகாராஷ்டிர காவல்துறை கோரியது. இதன் பேரில், டெல்லியில் உள்ள தேசிய மத்தியப் பணியகம் மூலம் மாசினுக்கு எதிராக இன்டர்போல் ரெட் நோட்டீஸை சிபிஐ பிறப்பித்தது. இதற்கிடையே, மாசின் ஐக்கிய அரபு அமீரகத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அந்நாட்டு அதிகாரிகள் அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்து கைது செய்தனர். பின்னர், உரிய சட்ட நடைமுறைகளின்படி அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகம் சென்ற மகாராஷ்டிர காவல்துறையின் தனிப்படையினர் மாசினை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, அவருடன் நேற்று இந்தியா வந்தடைந்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்தகட்ட நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.














