
விசாகப்பட்டினம், நவ. 21-
ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே சிங்கணகுடு பகுதியில் உள்ள செயிண்ட் வின்சென்ட் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி சஞ்சனாவின் கையெழுத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் எழுதும் எழுத்துகள், கணினியில் தட்டச்சு செய்து பிரிண்டர் மூலம் அச்சிட்டது போல ஒரே சீராகவும், அழகாகவும் இருப்பதே இதற்குக் காரணம். சஞ்சனாவின் கையெழுத்து இட்டாலிக் பாணியில் சாய்வாகவும், அடித்தல், திருத்தல் இன்றியும் காணப்படுகிறது. அவரது கையெழுத்து இடம்பெற்றுள்ள வீடியோ 150 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. இதைப் பார்த்த சமூக வலைதளப் பயனர்கள், “இது கையா, பிரிண்டிங் மெஷினா?” என வியந்து பாராட்டி வருகின்றனர்.சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்தைச் சேர்ந்த பிரகிருதி மல்லா என்ற மாணவியின் கையெழுத்தும் இதேபோல் உலகம் முழுவதும் வைரலானது. அப்போது 14 வயதாக இருந்த அவர், நேபாளத்தின் சைனிக் வாசியா மகாவித்யாலயாவில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவரது கையெழுத்தை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரகிருதி மல்லாவின் கையெழுத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் இடையிலான இடைவெளியும் சமமாக இருப்பதாக கையெழுத்து நிபுணர்கள் தெரிவித்தனர். நேபாள அரசு அவரது கையெழுத்தை அங்கீகரித்ததுடன், அது நேபாளத்தின் சிறந்த கையெழுத்து என்றும் பாராட்டப்பட்டது. ஆயுதப்படையினர் அவருக்கு விருதும் வழங்கினர். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் 51-வது ஆண்டு தினத்தையொட்டி அவர் வாழ்த்து கடிதம் எழுதியிருந்தார். அந்த வரிசையில், ஆந்திர மாணவி சஞ்சனாவின் கையெழுத்தும் ஒரே இரவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது















