
பெங்களூரு, நவ. 25-
தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த 21-ந்தேதி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்துக்கு 11 டி.எம்.சி. தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தது. ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி ஆகும். அந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு சுமார் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை எனப்படும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நேற்று முன்தினம் மாலை முதல் வினாடிக்கு 5,033 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 2-வது நாளான நேற்றும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,333 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே, மண்டியா மாவட்ட விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்காமல் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.













