Home மாவட்டங்கள் சென்னை அரிசி ஆலை உரிமையாளர்கள் வீடுகளில் சோதனை

அரிசி ஆலை உரிமையாளர்கள் வீடுகளில் சோதனை

சென்னை: நவ. 25-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் மூட்டைகள் அரிசியாக மாற்றுவதற்காக தனியார் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதில், பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 11 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 இடங்களிலும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.நவீன அரிசி ஆலைகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. நெல் மூட்டைகளை அரிசியாக மாற்றும் பணியில், ஆயிரக்கணக்கான டன் அரிசி இருப்பில் குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமலும் முறைகேடுகள் நடந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த முறைகேடு புகார் தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் காஞ்சிபுரம் மண்டல மேலாளர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோர் ஏற்கனவே பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சோதனைகளின் மூலம் முறைகேடு தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிற விவரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.