
பெங்களூரு, நவ. 25-
பெங்களூரு கப்பன் பூங்காவில் பிரமாண்ட மலர் கண்காட்சி இன்று (புதன்கிழமை) கோலாகலமாக தொடங்கியது.
கர்நாடக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் பெங்களூரு கப்பன் பூங்காவில் 5-வது முறையாக மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கப்பன் பூங்காவின் 155 ஆண்டுகால வரலாற்றில் நடைபெறும் இந்த சிறப்பு கண்காட்சி, இன்று தொடங்கி வருகிற டிசம்பர் மாதம் 7-ந்தேதி வரை 13 நாட்கள் நடைபெறுகிறது. பூங்காவில் உள்ள பவுண்டன் சர்க்கிள் முதல் பாலபவன் வரை சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பூந்தொட்டிகளில் வண்ண வண்ண மலர்கள் அடுக்கி வைக்கப்பட்டு கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
இந்த கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சமாக கர்நாடக வரைபடத்துடன் கூடிய புவனேஸ்வரி அம்மன், ஹொய்சாள கட்டிடக்கலை, கண்டபேருண்டா சின்னம், டெல்லி இந்தியா கேட் மற்றும் பெங்களூரு நம்ம மெட்ரோ ரெயில் பெட்டி ஆகியவை பல வண்ண மலர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கர்நாடகாவின் வீரப் பெண்களை கவுரவிக்கும் வகையில் செங்குத்து தோட்டமும் உருவாக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் நடனமாடும் மயில், பாண்டா கரடி, யானை, வண்ணத்துப்பூச்சி மற்றும் கார்ட்டூன் உருவங்களும், காய்கறிகள் மற்றும் பூக்களால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட கம்பளமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கின்றன.
இதனுடன் போன்சாய் மரங்கள் கண்காட்சி, தினசரி இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் பேண்ட் வாத்திய நிகழ்ச்சி, ரங்கோலி மற்றும் காய்கறி சிற்ப போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மலர் கண்காட்சியை காண பெரியவர்களுக்கு சாதாரண நாட்களில் ரூ.50-ம், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ரூ.80-ம் நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல் நாளான இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் ஆர்வமுடன் வந்து மலர் அலங்காரங்களை பார்வையிட்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.













