Home செய்திகள் தேசிய செய்திகள் திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை

திருமலை, நவ. 27-
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்தமான் ஜெயின் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் ரூ.208 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியுள்ளனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், இந்த ஆபரணத் தொகுப்பு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் கிரீடம், ஒட்டியாணம், புஜகீர்த்திகள், சங்கு–சக்கரம், அபய ஹஸ்தங்கள் உள்ளிட்ட 46 வகையான ஆபரணங்கள் இடம்பெற்றுள்ளன. தேவஸ்தான வரலாற்றில் தனிநபர் ஒருவர் கோயிலுக்கு வழங்கிய மிகப் பெரிய நன்கொடையாக இது கருதப்படுகிறது. சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியியல் படித்த வர்தமான் ஜெயின், அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1997-ம் ஆண்டு தொழில்முனைவோர் பயணத்தைத் தொடங்கிய அவர், டெல் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகித்தார். பின்னர், சர்வதேச சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஆக்சஸ் ஹெல்த்கேர்’ மற்றும் ‘ஆசியா சென்னை இன்ஜினியரிங்’ நிறுவனத்தை நிறுவினார். 2025-ம் ஆண்டில் ‘ஆக்சஸ் ஹெல்த்கேர்’ நிறுவனத்தின் பங்குகளை ரூ.18,524 கோடிக்கு விற்பனை செய்தார். தொழிலதிபராக மட்டுமின்றி, ‘ஸ்ரீ சரிதா ஜெயின் அறக்கட்டளை’ மூலம் கல்வி உதவி மற்றும் பசியைப் போக்கும் பணிகளிலும் வர்தமான் ஜெயின் ஈடுபட்டு வருகிறார். சென்னை காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை மூலம் மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார். திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்கு ஏற்கெனவே ரூ.7 கோடி, கோசாலையில் கால்நடைகளுக்கான தீவனம் கலக்கும் ஆலை அமைக்க ரூ.5 கோடி, நாணயம் எண்ணும் இயந்திரம் வாங்க ரூ.1 கோடி ஆகியவற்றை அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும், மின்சாரப் பேருந்துகளையும் தேவஸ்தானத்துக்கு வழங்கியுள்ளார்.