Home மாவட்டங்கள் சென்னை 10 ஆண்டுகளில் 15,959 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை

10 ஆண்டுகளில் 15,959 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை

சென்னை, நவ. 27-
தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன 3 லட்சத்து 4,534 பேரில், 15,959 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையை தமிழக டிஜிபி சார்பில் உதவி ஐஜி பிரதீப் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி, காணாமல் போன தனது கணவர் சங்கர் ராஜை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, பி.கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சங்கர் ராஜை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திருக்கோவிலூர் டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர்,
அவர்களை நவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, அந்த வழக்குகளின் புலன் விசாரணை நிலை என்ன என்பது குறித்தும் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு இதே அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டிஜிபி சார்பில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த அக். 30 முதல் நவ. 13 வரை தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்களில் 624 ஆண்கள், 1,469 பெண்கள், 128 சிறுவர்கள், 289 சிறுமிகள் என மொத்தம் 2,510 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.