
மும்பை, நவ. 29-
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் மற்றும் தங்கம் கடத்தல் தொடர்பாக, மொத்தம் ரூ.39.84 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாங்காக் செல்லும் தாய் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவரது உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ ‘கெட்டமைன்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பயணி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து மேலும் 7 கிலோ ‘கெட்டமைன்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 12 கிலோ ‘கெட்டமைன்’ போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.36 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.மற்றொரு சம்பவத்தில், வெளிநாட்டிலிருந்து மும்பை வந்த 2 பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ரூ.2 கோடியே 27 லட்சம் மதிப்பிலான 6½ கிலோ உயர்தர கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அந்த 2 பயணிகளும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதேபோல், வெளிநாடுகளில் இருந்து ரூ.1 கோடியே 57 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ 443 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததாக 4 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சோதனைகளில் போதைப்பொருள் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.













