
சென்னை, நவ. 29-
பெண் உயர் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட இயக்குநராகப் பணியாற்றிய லலிதா, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் கடந்த மாதம் 19-ந்தேதி புகார் மனு அளித்தார். அதில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் மாவட்ட திட்ட இயக்குநராகப் பணியாற்றி வந்ததாகவும், கடந்த அக்டோபர் 18-ந்தேதி வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தன்னை செல்போனில் தொடர்புகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் காலை உணவு திட்டத்தில் ஒரு பெண்ணை ஏன் பணியில் சேர்த்தீர்கள் என்று எம்.எல்.ஏ. கேட்டதாகவும், அதற்கு அந்தப் பணியாளரை நியமிக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை என்றும், அதற்கென தனிக் குழு இருப்பதாகவும் லலிதா பதிலளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அப்போது, “நான் யார் தெரியுமா? என்னைப் பற்றி தெரிந்துகொண்டுதான் இந்த மாவட்டத்துக்கு வேலைக்கு வந்தீர்களா?” என்று வசந்தம் கார்த்திகேயன் கேட்டதாகவும், சாதியைப் பார்த்து வேலை வழங்குவதாகவும், சாதியைச் சொல்லித் திட்டுவதாகவும் கூறி அமைச்சரிடமும் உயர் அதிகாரிகளிடமும் பேசுவதாக மிரட்டல் தொனியில் பேசியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரும் தன்னை மிரட்டுவதாக லலிதா குறிப்பிட்டுள்ளார். மேலும், தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை இருவரும் வாட்ஸ்-அப் மூலம் பரப்பி வருவதாகவும், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை நீக்கி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இந்தப் புகார் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் தியாகதுருகம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, வசந்தம் கார்த்திகேயன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.













