Home மாவட்டங்கள் சென்னை கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்.எல்.ஏ. ஜாமின் மனு

கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்.எல்.ஏ. ஜாமின் மனு

சென்னை, நவ. 29-
கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், ஜாமின் கோரி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷுக்கு வயது 36. இவர் தனது செல்போனில் இருந்து பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 23-ந்தேதி கலெக்டர் அளித்த புகாரின் பேரில், அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். பின்னர், நள்ளிரவு 1.15 மணியளவில் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக குடியிருப்பில் இருந்த குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (எண்-1) நீதிபதி (பொறுப்பு) பானுமதி முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அருள் விக்னேஷை வருகிற 11-ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பானுமதி உத்தரவிட்டார். இதையடுத்து, அதிகாலை 2 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். நேற்று அதிகாலை 4 மணியளவில் அருள் விக்னேஷ் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ஜாமின் கோரி அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மீதான விசாரணை நாளை மறுநாள், அதாவது டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.