
புதுடெல்லி, நவ. 29- மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்கக்கூடாது என்று இண்டியா கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
இண்டியா கூட்டணியின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடந்த கூட்டத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். சமாஜ்வாதி எம்பி ராம்ஜிலால் சுமன், திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் மனோஜ் ஜா, அபய் குமார் சிங், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சந்தோஷ் குமார், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ரஹீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:
இண்டியா கூட்டணி சார்பில் 3 கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம். மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடாது. தற்போதைய 543 தொகுதிகள் வரம்பிலேயே மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல் செய்ய வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு மக்களவைத் தொகுதிகளில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது.
பிரதமர் மோடியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் தலைமையில் தொகுதி மறுவரையறை நடைபெறும். எனவே எஸ்ஐஆர் வாக்கு திருட்டு போன்று இதிலும் சதி வேலைகள் அரங்கேறும். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் தொகுதி மறுவரையறை மசோதாவை நாங்கள் தீவிரமாக எதிர்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இண்டியா கூட்டணியில் இடம்பெறாத திமுக, ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அந்த கட்சிகளும் கூட்டத்தை புறக்கணித்தன.













