Home செய்திகள் தேசிய செய்திகள் அமீத்ஷாவிடம் அதிருப்தி வெளிப்படுத்திய எடப்பாடி பழனிசாமி

அமீத்ஷாவிடம் அதிருப்தி வெளிப்படுத்திய எடப்பாடி பழனிசாமி

சென்னை: மே 14 –
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி மூலம் பேசி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அதிமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என பாஜக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில், தவெக அரசுக்கு அதிமுகவின் ஒரு பிரிவு ஆதரவு தெரிவித்திருப்பது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளநிலையில், அடுத்தகட்ட நகர்வு குறித்து எடப்பாடி ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டது. பல தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதோடு, பல முன்னணி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி மூலம் பேசி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, “தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தான் நான் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கூறியிருந்தேன். ஆனால் சில முன்னாள் அமைச்சர்கள் அவசர அவசரமாக தவெகவுக்கு ஆதரவு அளித்து விட்டனர்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த அமித் ஷா, “திமுக மேற்கொண்ட அரசியல் அணுகுமுறையையே தற்போது தவெகவும் பின்பற்றுகிறது. நிலைமை எப்படி மாறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதிமுக தற்போது இரண்டு அணிகளாக வெளிப்படையாக செயல்பட தொடங்கியுள்ளது. ஒரு தரப்பில் எடப்பாடி பழனிசாமி அணியும், மறுபுறம் எஸ்.பி. வேலுமணி – சி.வி. சண்முகம் அணியும் செயல்பட்டு வருகின்றன.