Home செய்திகள் தேசிய செய்திகள் அம்பாலாவில் கட்டிடம் இடிந்து 4 பேர் பலி

அம்பாலாவில் கட்டிடம் இடிந்து 4 பேர் பலி

அம்பாலா, செப். 28-
ஹரியானா மாநிலம் அம்பாலா அருகே கட்டுமானப் பணியில் இருந்த மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயமடைந்தனர். அம்பாலா நகருக்கு அருகிலுள்ள துல்கோட் கிராமத்தில் இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்டிடத்தின் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது, கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது கட்டுமானப் பணியாளர்கள் சிலர் மேல்தளத்திலும், மற்றவர்கள் கீழ்தளத்திலும் பணியில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்ததும், உள்ளூர் மக்கள், காவல் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த பணியாளர்களை மீட்கும் பணிகள் உடனடியாகத் தொடங்கின. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும், மாவட்ட நிர்வாகத்தினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட பணியாளர்கள் அம்பாலா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக அம்பாலா காவல் துறை கண்காணிப்பாளர் அஜித் சிங் ஷெகாவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். கட்டிடத்தின் உரிமையாளர் யார், முறையான அனுமதி பெறப்பட்டதா, கட்டுமானத்தில் விதிமீறல்கள் நடந்தனவா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றார். இடிபாடுகளில் சிக்கிய பணியாளர்களை மீட்க இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். காயமடைந்த 12 பணியாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பேர் தங்களது விருப்பத்தின் பேரில் மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். மற்றவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைக்கப்பட்டதாக அம்பாலா அரசு மருத்துவமனை அறுவைச் சிகிச்சை நிபுணர் ரேணு பேரி தெரிவித்தார்.