
இஸ்லாமாபாத், செப். 15- மும்பை தாக்குதல் குற்றவாளியும், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனருமான மசூத் அஸார், 58, குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.24 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சன்மானத்தை உயர்த்தி பாகிஸ்தான் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைவர் மசூத் அஸார், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறான். 2001ல் இந்திய பார்லிமென்ட் தாக்குதல், 2008ல் மும்பை தாக்குதல், 2016ல் பதான்கோட் விமானப்படை தள தாக்குதல், 2019ல் புல்வாமா குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு இவர் மூளையாக செயல்பட்டுள்ளான். இவரை ஐ.நா. பாதுகாப்பு சபை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. கடந்த 2001ல் நடந்த பார்லிமென்ட் தாக்குதலில் இருந்து, இந்தியாவிடம் அஸாரை ஒப்படைக்குமாறு 24 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு பாகிஸ்தானை வலியுறுத்தி வருகிறது.
















