இந்தியா கூட்டணி போராட்டம்

புதுடெல்லி.டிச. 22- 

பாராளுமன்றத்திற்கு பாதுகாப்பு இல்லை பாராளுமன்ற பாதுகாப்பில் மத்திய அரசு முழு தோல்வி அடைந்து விட்டது என்று இந்தியா கூட்டணி கட்சிகள் கேள்வி எழுப்பி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க வேண்டும் என்ற வலியுறுத்தியதால் 146 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஜனநாயக படுகொலை நடத்தப்பட்டுள்ளது என்று கூறி இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று நாடு முழுவதும் பிஜேபிக்கு எதிராக போராட்டம் நடத்தின. இந்த விவகாரத்தை அடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஒரு ஆயுதமாக பயன்படுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் தங்கள் ஒற்றுமையை பலப்படுத்த திட்டமிட்டு உள்ளன.நாடாளுமன்றத்தில் இருந்து 146 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா கூட்டணி தலைவர்கள் தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக கூட்டணி தலைவர்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை “நெறிமுறையற்றது மற்றும் சட்டவிரோதமானது” என்று கூறி நாட்டின் அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டித்தன.டிசம்பர் 13 நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அறிக்கை அளிக்கக் கோரி, மக்களவை மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியான இந்தியக் கூட்டணியின் 146 உறுப்பினர்களை இரு அவைகளின் சபாநாயகர்கள் இடைநீக்கம் செய்தனர்.நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மத்திய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் இன்று ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே 146 எம்பிக்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டது குறித்து பாராளுமன்றத்தில் எதுவும் பேசாத பிரதமர் நரேந்திர மோடி வெளியில் இருந்து அறிக்கைகள் விடுகிறார் இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரிய பதில் அளிக்காமல் அலட்சியம் காட்டி வருகிறார் என்று கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.