
வாஷிங்டன், நவ. 22-
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டியுள்ளார். அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2022-23-ம் ஆண்டில் 7.2 சதவீதமாகவும், 2023-24-ல் 7.3 சதவீதமாகவும், 2024-25-ல் 7.2 சதவீதமாகவும் இருந்தது. 2025-26 நிதியாண்டில் அது 7.6 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதே காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சி ஒரு சதவீதமாகவும், சீனாவின் வளர்ச்சி 4.5 சதவீதமாகவும், அமெரிக்காவின் வளர்ச்சி 2.3 சதவீதமாகவும் இருந்தது. இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் என சர்வதேச நிதி அமைப்புகள் கணித்துள்ளன. இதற்கிடையே, அமெரிக்காவில் உணவு மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் கடந்த செப்டம்பரில் 3.6 சதவீதமாக அதிகரித்தது. அதை 2 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி கடந்த செப்டம்பரில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது. வரும் டிசம்பர் தொடக்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் மேலும் 0.5 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ட்ரம்ப் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய வங்கி தலைவர் கெவின் வார்ஷுக்கும் ட்ரம்புக்கும் இடையே நேரடி மோதல் நீடிப்பதாக கூறப்படுகிறது.வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய ட்ரம்ப், அமெரிக்கப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் நிலையில், நியாயமான காரணமின்றி வட்டி உயர்த்தப்படுவது தவறான அணுகுமுறை என்றார். இந்தியாவில் வட்டி குறைவாக இருப்பதால் வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது என்றும், இந்தியக் கொள்கைகளைப் பின்பற்றினால் அமெரிக்கா 14 முதல் 15 சதவீதம், ஏன் 20 சதவீத வளர்ச்சியையும் எட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.















