Home செய்திகள் தேசிய செய்திகள் பிஹாரில் ரூ.34,470 கோடி திட்டங்கள் தொடக்கம்

பிஹாரில் ரூ.34,470 கோடி திட்டங்கள் தொடக்கம்

பாட்னா, நவ. 22-
பிஹாரில் ரூ.34,470 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். இதன் ஒரு பகுதியாக, கங்கை நதியில் ரூ.4,280 கோடி செலவில் கட்டப்பட்ட நிதிஷ் பாலத்தையும் அவர் திறந்துவைத்தார். பிஹார் தலைநகர் பாட்னாவுக்கு நேற்று பிற்பகல் சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற விழாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தார். பாட்னா மாவட்டத்தின் கச்சி தர்காவையும், வைஷாலி மாவட்டத்தின் பிடிபூரையும் இணைக்கும் வகையில் கங்கை நதியில் 19.7 கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்ட தொங்கு பாலம் இதில் முக்கியமானதாகும். பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 26,900 வீடுகளையும் பயனாளிகளிடம் அவர் ஒப்படைத்தார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் பிஹாரில் நல்லாட்சிக்கு வித்திட்டார். அவரது முயற்சியால் கங்கை நதியில் கட்டப்பட்ட புதிய ஆற்றுப் பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். நிதிஷ் குமாரின் மக்கள் நலச் சேவையை அங்கீகரிக்கும் வகையில், புதிய பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பிஹார் என்றாலே ஊழல்கள் மட்டுமே நினைவுக்கு வந்தன. இப்போது பிஹார் என்றால் வளர்ச்சித் திட்டங்கள் நினைவுக்கு வருகின்றன. இந்த மாநிலத்தில் முதலீடுகள் குவிந்து வருகின்றன.