Home செய்திகள் உலக செய்திகள் இந்தோனேசிய மிட்டாய் தொழிற்சாலையில் தீ: 3 பேர் பலி

இந்தோனேசிய மிட்டாய் தொழிற்சாலையில் தீ: 3 பேர் பலி

பான்டென், நவ. 22-
இந்தோனேசியாவின் பான்டென் மாகாணத்தில் உள்ள மிட்டாய் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் காணவில்லை என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவுக்கு மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செராங் மாவட்டத்தின் சிகாண்டே பகுதியில் அமைந்துள்ள தொழில்துறை வளாகத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.மிட்டாய் மற்றும் சர்க்கரைப் பொருட்கள் தயாரிக்கும் ‘ஃபோனுசா அகுங் முலியா’ தொழிற்சாலையில் பிற்பகல் முதல் இரவு வரை தீ பரவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரக் காட்சிகளில், கட்டிடத்தின் ஒரு பகுதி தீயில் எரிந்ததுடன், அதன் கூரையும் இடிந்து விழுந்தது தெரியவந்தது. சுமார் 40 ஊழியர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தொழிற்சாலை நிர்வாகம் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததாக பான்டென் மாகாணக் காவல்துறை அதிகாரி கூறினார். இதனிடையே, 30-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் காணவில்லை என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். தொழிற்சாலையின் சில பகுதிகளில் தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருப்பதால், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் சிக்கல் நீடித்து வருகிறது என்று மீட்பு அதிகாரி ரிஸ்கி டுவியாண்டோ தெரிவித்தார். களத்தில் பணியாற்றும் மீட்புக் குழுவினரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, கூட்டுத் தேடல் மற்றும் மீட்புப் படையினர் அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். காணாமல் போன ஊழியர்களின் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக உள்ளூர் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தி, காணாமல் போனவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.