
பெங்களூரு, நவ. 22-
புரட்சியாளர் பசவண்ணரை அவமதித்ததாக எழுந்த புகாரின் பேரில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘பசவ மண்டபம்’ புத்தகத்தின் எழுத்தாளர் ரவி ஹன்ஜிடம் பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக பதிவான புகாரின் அடிப்படையில், கொச்சின் விமான நிலையத்தில் எழுத்தாளர் ரவி ஹன்ஜை ஹைகிரவுண்ட்ஸ் போலீஸ் நிலைய அதிகாரிகள் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், நாளை மீண்டும் ஹைகிரவுண்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறும் அந்த நோட்டீசில் உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த ரவி ஹன்ஜ், பசவண்ணரை நிந்திக்கும் அல்லது அவமதிக்கும் நோக்கத்தில் புத்தகத்தில் எந்தக் கருத்தையும் எழுதவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். ‘பசவ மண்டபம்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகள் குறித்து ஏற்கனவே கன்னட இலக்கியம் மற்றும் சமூக வட்டாரங்களில் தீவிர விவாதம் நடந்து வருகிறது.
எழுத்தாளர் ரவி ஹன்ஜ் கடந்த இரண்டு ஆண்டுகளாக கன்னடப் பத்திரிகை ஒன்றில் எழுதிய தொடர் கட்டுரைகளைத் தொகுத்து ‘பசவ மண்டபம்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருந்தார். கடந்த நவம்பர் 15-ந்தேதி பெங்களூருவில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. ஆனால், புத்தகம் வெளியான பிறகு பசவண்ணர் குறித்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த சில வரிகளும், பேட்டி ஒன்றில் எழுத்தாளர் தெரிவித்த கருத்துகளும் பெரும் சர்ச்சையைக் கிளப்பின.
கடந்த நவம்பர் 13-ந்தேதி நடந்த பேட்டியில், பசவண்ணரின் புகழ்பெற்ற வசனமான ‘களவு செய்யாதே, கொலை செய்யாதே, பொய் பேசாதே’ என்ற வரிகளை விளக்கும் போது, பசவண்ணரை திருடன் மற்றும் கொலைகாரன் போல ரவி ஹன்ஜ் சித்தரித்துப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், லிங்காயத் என்ற வார்த்தையைத் திரித்து ‘லிங்காகத’ என்று குறிப்பிட்டதாகவும், லிங்காயத் சமுதாயப் பெரியவர்கள் மற்றும் சரணர் பாரம்பரியம் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகவும் சமுதாயத் தலைவர்கள் குற்றம் சாட்டினர். அந்தப் பேட்டியின் சில பகுதிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், பசவ சமிதி தலைவர் அரவிந்த் ஜத்தி மாநில அரசிடம் புகார் அளித்தார். பசவண்ணர் குறித்த அவதூறு எழுத்துகள் மற்றும் பேச்சுகள் மூலம் மத உணர்வுகளைப் புண்படுத்தி, சமூகத்தில் வெறுப்பையும் அமைதியின்மையையும் ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளதாக அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், கடந்த நவம்பர் 19-ந்தேதி நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ‘பசவ மண்டபம்’ புத்தகத்தைப் பறிமுதல் செய்யவும், எழுத்தாளர் ரவி ஹன்ஜ் மற்றும் பதிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.













