
சென்னை: அக். 9-
சென்னை திருவான்மியூர் ராஜீவ்காந்தி சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் நேற்று காலை திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. அந்தச் சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக பள்ளத்துக்குள் விழுந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. காரை ஓட்டி வந்த ஓட்டுநர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கிலோமீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடமும் ஒன்று. இந்த வழித்தடத்தில் திருவான்மியூரில் இருந்து தரமணி நோக்கி ‘பவானி’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், திருவான்மியூர் மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில், எல்நெட் (Elnet) கட்டிடத்துக்கு எதிரே உள்ள சாலையில் நேற்று காலை சுமார் 10.45 மணியளவில் திடீரென பெரிய பள்ளம் உருவானது. அப்போது அந்தச் சாலையில் சென்றுகொண்டிருந்த கார், பள்ளம் ஏற்பட்டதை அறிய முடியாத நிலையில் அதற்குள் விழுந்தது. இதில் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. காரில் இருந்த ஓட்டுநர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், பள்ளத்தில் விழுந்த கார் கிரேன் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டது.
சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அந்தப் பகுதி மூடப்பட்டது. ஏற்பட்ட பள்ளத்தை கான்கிரீட் கலவை கொண்டு மூடும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவான்மியூர் ராஜீவ்காந்தி சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.













