Home மாவட்டங்கள் சென்னை இருவேறு மதத் திருமணப் பதிவு செல்லாது: ஐகோர்ட்

இருவேறு மதத் திருமணப் பதிவு செல்லாது: ஐகோர்ட்

சென்னை: நவ. 24-
இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் திருமணத்தை இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது சட்டப்படி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் 2009-ம் ஆண்டு பிப். 20-ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றதாக, இந்து திருமணச் சட்டத்தின் கீழ் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்தத் திருமணம் தனது விருப்பத்துக்கு மாறாக, தன்னை ஏமாற்றி நடத்தப்பட்டதாகவும், தான் கிறிஸ்தவர் என்பதால் இந்து திருமணச் சட்டத்தின்கீழ் அந்தத் திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரி அந்த இளைஞர், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், எஸ். ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
விசாரணையின்போது, தாம் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்றும், 1998 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் ஞானஸ்நானம் பெற்றதற்கான ஆவணங்கள் உள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார். இதை குடும்ப நல நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது. ஏற்கெனவே கிறிஸ்தவராக இருப்பவர் மற்றொரு கிறிஸ்தவ சபையில் இணையும்போது புதிதாக ஞானஸ்நானம் பெறுவது வழக்கமானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்து திருமணச் சட்டத்தின் 5-வது பிரிவின்படி, திருமணம் செய்து கொள்ளும் கணவன், மனைவி இருவருமே இந்துக்களாக இருக்க வேண்டும். எனவே, இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் அந்தச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்து கொண்டால், அது செல்லாது. தமிழகத்தில் நடைபெறும் சுயமரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் 7-ஏ பிரிவும் இதுபோன்ற திருமணங்களுக்கு பொருந்தாது; சுயமரியாதை திருமணத்திலும் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.