Home செய்திகள் தேசிய செய்திகள் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றவாளிக்கு இடைக்கால ஜாமின்

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றவாளிக்கு இடைக்கால ஜாமின்

குஜராத்: நவ. 24-
குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி எரிக்கப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இர்பான் சிராஜ் படாவுக்கு, மருத்துவ காரணங்களுக்காக உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமின் வழங்கியது.
குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் 2002-ம் ஆண்டு பிப்ரவரியில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. இந்த வழக்கில் நீண்டகால விசாரணைக்குப் பிறகு இர்பான் சிராஜ் படா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் இர்பான் சிராஜ் படா, உடல்நலக் குறைபாடுகளை காரணமாகக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பிரசன்னா பி.வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
குஜராத் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுவாதி கில்டியால், மருத்துவ காரணங்களுக்காக இர்பான் சிராஜ் படாவுக்கு ஜாமின் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த மனு மருத்துவ காரணங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் உடல்நிலை தொடர்பாக அவரது மூத்த வழக்கறிஞர் சமர்ப்பித்த தகவல்கள் உண்மையானவை என்று மாநில அரசு வழக்கறிஞரும் தெரிவித்துள்ளார். எனவே, மருத்துவ காரணங்களுக்காக மனுதாரரின் தண்டனையை நிறுத்தி வைக்கிறோம்” என்று தெரிவித்தனர்.மேலும், இந்த உத்தரவு வழக்கிலிருந்து இர்பான் சிராஜ் படாவை விடுதலை செய்வதாகாது என்றும், இது இடைக்கால நிவாரணம் மட்டுமே என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். விசாரணை நீதிமன்றம் விதிக்கும் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டே அவருக்கு ஜாமின் வழங்கப்படுவதாகவும் அவர்கள் உத்தரவிட்டனர்.