
சென்னை, நவ. 24-
சென்னையில் உள்ள வானியல் ஆர்வலர்களுக்கு இந்த வாரம் இரண்டு சுவாரஸ்யமான வானியல் நிகழ்வுகள் காத்திருக்கின்றன. கார்த்திகை தீபத் திருநாளான இன்று (நவம்பர் 24), வானில் பிரமாண்ட முழு நிலவு தோன்றுகிறது.
இந்திய நேரப்படி இன்று இரவு 8.23 மணிக்கு நிலவு முழு பிரகாசத்துடன் காணப்படும்.
முழு நிலவு பூமிக்கு மிக நெருக்கமாக வரும் போது அது ‘சூப்பர் மூன்’ எனப்படுகிறது. அப்போது நிலவு வழக்கத்தைவிட சற்று பெரியதாகவும், கூடுதல் பிரகாசத்துடனும் தோன்றும். நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில் தொடர்ந்து தோன்ற உள்ள பிரமாண்ட முழு நிலவுகளின் தொடக்கமாக இன்றைய நிகழ்வு அமைகிறது. வானம் மேகமூட்டமின்றி தெளிவாக இருந்தால், இந்த முழு நிலவை எந்த உபகரணங்களும் இன்றி வெறும் கண்களால் பார்த்து ரசிக்கலாம்.இதற்கிடையே, வரும் நவம்பர் 26-ம் தேதி, வியாழக்கிழமை, யுரேனஸ் கிரகம் ‘எதிரெதிர் நிலை’ எனப்படும் வானியல் நிலையை அடைகிறது. அதாவது, சூரியனுக்கும் யுரேனஸ் கிரகத்திற்கும் இடையில் பூமி வரும் நிலையே எதிரெதிர் நிலையாகும். இந்த நிலையில், இந்த ஆண்டில் யுரேனஸ் மிகவும் பிரகாசமாகக் காட்சியளிக்கும் என்று வானியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.பூமியில் இருந்து 2.7 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள யுரேனஸ், அன்றைய தினம் இரவு முழுவதும் வானில் தெரியும். அதை காண பைனாகுலர் அல்லது குறைந்த திறன் கொண்ட தொலைநோக்கியைப் பயன்படுத்துவது சிறந்தது. யுரேனஸை வெறும் கண்களால் பார்ப்பது மிகவும் கடினம். எனினும், ஸ்மார்ட்போன் கேமராவை டிரைப்பாடில் பொருத்தி, 10 முதல் 30 வினாடிகள் வரை ‘எக்ஸ்போஷர்’ கொடுத்து படம் பிடிக்க முடியும். அதன் தனித்துவமான நீல நிறத்தையும் காணலாம் என்று வானியல் ஆர்வலர்கள் கூறினர்.














