Home மாவட்டங்கள் பெங்களூர் கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த ஏற்பாடுகள் தீவிரம்

கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த ஏற்பாடுகள் தீவிரம்

பெங்களூர், அக். 24-
விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களில் ராஷ்ட்ரிய சுயசேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) சார்பில் பேரணி (பதசஞ்சலனம்) மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன.
கலபுரகியில் கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி
கலபுரகியில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நகரேஸ்வர பள்ளியில் தொடங்கி சரணபசவேஸ்வரா மைதானம் வரை செல்லும் பேரணிக்கு சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் ஷாலூ அனுமதி அளித்துள்ளார். பேரணியின் போது நிர்ணயிக்கப்பட்ட பாதையிலேயே செல்ல வேண்டும் என்றும், தூண்டும் வகையில் பேசக் கூடாது என்றும் காவல்துறையினர் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
ஹூப்பள்ளி மற்றும் ராமநகரத்திலும் அனுமதி
ராமநகரில் நாளை காலை 9.30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்து அக்ரகாரம் வரை 2 கி.மீ. தூர பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல ஹூப்பள்ளி நேரு மைதானத்தில் அக்டோபர் 25-ஆம் தேதி நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள். கோலார், மைசூரிலும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
துமகூருவில் அனுமதி கிடைப்பதில் தாமதம்
அதேவேளையில், துமகூரு மாவட்டத்தில் பேரணி நடத்த இதுவரை காவல்துறை அனுமதி வழங்கவில்லை. அங்கு பட்டதாரி தொகுதி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.