Home செய்திகள் தேசிய செய்திகள் குஜராத்தில் நாட்டின் முதல் எல்என்ஜி ரயில்

குஜராத்தில் நாட்டின் முதல் எல்என்ஜி ரயில்

அகமதாபாத், செப். 28-
குஜராத்தில் நாட்டின் முதல் எல்என்ஜி ரயிலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.1,542 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, சபர்மதி ரயில் நிலையத்திலிருந்து நாட்டின் முதல் எல்என்ஜி ரயில் சேவை தொடங்கப்பட்டது.இந்திய ரயில்வேயில் தூய்மையான மற்றும் மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் இத்திட்டம் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. எல்என்ஜி என்பது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவாகும்.
இந்த ரயில் முழுமையாக எல்என்ஜியை மட்டுமே சார்ந்திருக்காது. இதன் என்ஜின் எல்என்ஜி மற்றும் டீசல் ஆகிய இரு எரிபொருட்களிலும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் இருப்பைப் பொறுத்து, ரயிலின் என்ஜின் எல்என்ஜி அல்லது டீசலுக்கு இடையே மாறிக்கொள்ளும். இதனால் எல்என்ஜி கிடைக்காத சூழலிலும் ரயில் சேவையைத் தடையின்றி தொடர முடியும். இந்த அமைப்பின் மூலம், டீசல் பயன்பாட்டில் சுமார் 40 சதவீதத்தை எல்என்ஜி மூலம் ஈடுசெய்ய முடியும். இதன் மூலம் டீசல் பயன்பாடு மற்றும் எரிபொருள் செலவுகள் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் உள்ளிட்ட மாசு ஏற்படுத்தும் வெளியேற்றங்களையும் குறைப்பதே இம்முயற்சியின் நோக்கமாகும்.புதிய எல்என்ஜி ரயிலைத் தொடங்கி வைத்ததுடன், கவச் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்புக்கும் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.