Home செய்திகள் தேசிய செய்திகள் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படும் சிறுமியரில் 3ல் ஒருவர் இந்தியர்

குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படும் சிறுமியரில் 3ல் ஒருவர் இந்தியர்

புதுடில்லி, அக். 12-
உலகில் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படும் சிறுமியரில் மூன்றில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தை திருமணத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவில் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது பெண்களுக்கு 18, ஆண்களுக்கு 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தை திருமணம் பெருமளவு தடுக்கப்பட்டாலும், கிராமப்புறங்களில் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெறுகிறது. இதை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு 2024-ல் ‘குழந்தை திருமணமில்லா இந்தியா’ இயக்கத்தைத் தொடங்கியது. மேலும், 2030-க்குள் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யுனிசெப் ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 17 வயது பூர்த்தியடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்ட சிறுமியரின் எண்ணிக்கை 22 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இவர்களில் 9 கோடிக்கும் அதிகமானோர் 15 வயதை அடைவதற்கு முன்பே கட்டாய திருமணத்தில் தள்ளப்படுகின்றனர். உலகளவில் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படும் சிறுமியரில் மூன்றில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் மொத்த குழந்தை திருமணங்களில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறுகின்றன. கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் குழந்தை திருமணத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.