
சென்னை, செப். 20- சென்னையில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்புப் பணிகளில் 3,597 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையர் பேசியதாவது: மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இப்பணிகளை மேற்கொண்டு தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும். மக்களைப் பாதுகாப்பதில் அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்புப் பணிகளுக்காக மொத்தம் 3,597 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பயிற்சிகளும், தேவையான அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணியாளரும் தினமும் 80 முதல் 100 வீடுகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர். மாநகரப் பகுதியில் உள்ள காலி நிலங்கள், வணிக வளாகங்கள், புதிய கட்டுமான இடங்கள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், வீடுகள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறப் பகுதிகளில் கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. மேலும், கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள தேங்காய் மட்டைகள், ஓடுகள், கண்ணாடிப் பொருட்கள், டயர்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை கண்டறிந்து அழிக்கும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 3 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 161 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் ஆணையர் தெரிவித்தார். கூட்டத்தில் துணை ஆணையர் (சுகாதாரம்) தாக்கரே சுகம் ஞான தேவராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.













