Home செய்திகள் தேசிய செய்திகள் டில்லியில் கனமழை: வானிலை மையம் ரெட் அலர்ட்

டில்லியில் கனமழை: வானிலை மையம் ரெட் அலர்ட்

புதுடில்லி, அக். 12-
டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய பலத்த கனமழை பெய்தது. இதையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் டில்லிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக டில்லியின் பல முக்கியப் பகுதிகளிலும், அண்டை நகரங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. கரோல் பாக் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஜண்டேவாலான் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்தப் பகுதி சாலைகளில் தண்ணீர் தேங்கியதுடன், வாகனப் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. டில்லியின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்ததால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.டில்லியை ஒட்டியுள்ள நொய்டா, குருகிராம், காசியாபாத் ஆகிய நகரங்களிலும் அதிகாலையிலேயே இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகியது. இந்த நகரங்களிலும் மோசமான வானிலை நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் உருவானது. மோசமான வானிலை காரணமாக டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, பயணிகள் தங்களது விமானச் சேவை நிறுவனங்களிடம் விமானங்களின் நிலை குறித்து சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டில்லியில் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மணிக்கு 15 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடிய கடுமையான இடியுடன் கூடிய புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.