Home செய்திகள் தேசிய செய்திகள் தருண் தேஜ்பால் சரண்

தருண் தேஜ்பால் சரண்

புதுடெல்லி, செப். 15- உடன் பணிபுரிந்த பெண் பத்திரிகையாளரைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், ‘தெஹல்கா’ முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று (திங்கள்கிழமை) கோவா நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த 2013-ம் ஆண்டில், உடன் பணிபுரிந்த பெண் பத்திரிகையாளரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தருண் தேஜ்பால் மீது கோவாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, தருண் தேஜ்பாலை கடந்த 2021-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தருண் தேஜ்பால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதோடு, தான் சரணடைவதில் இருந்து விலக்கு கோரி இடைக்கால மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். இவ்விரு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி அலோக் ஆராதே தலைமையிலான அமர்வு முன்பு கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி விசாரணைக்கு வந்தன. அப்போது, சரணடைவதில் இருந்து விலக்கு கோரி தருண் தேஜ்பால் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.