
புதுடெல்லி, செப். 28-
தீவிரவாதத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 138-வது உரையில் அவர் பேசியதாவது: 2016-ம் ஆண்டு செப்டம்பர் 28, 29 தேதிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்பதை உலகுக்குத் தெளிவாகத் தெரிவித்தோம். பாலகோட் விமானத் தாக்குதல் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை இந்திய வீரர்கள் தங்களது வீரத்தைப் பறைசாற்றி வருகின்றனர். தீவிரவாதிகள் மீண்டும் தலைதூக்கினாலும், அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம் என்றார். 2008 செப்டம்பர் 13-ல் டெல்லியில் தொடர் குண்டுவெடிப்பும், நவம்பர் 26-ல் மும்பையில் மிகப்பெரிய தாக்குதலும் நடைபெற்றன. அப்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது தீவிரவாதத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.













