Home செய்திகள் தேசிய செய்திகள் தேர்தல் கமிஷனருக்கு வலுக்கும் எதிர்ப்பு

தேர்தல் கமிஷனருக்கு வலுக்கும் எதிர்ப்பு

புதுடெல்லி, செப். 26-
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி காங்கிரஸ் சார்பில் நேற்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு மாநிலத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி, முற்றுகைப் போராட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகம் நோக்கி காங்கிரஸார் பேரணியாகச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் தேர்தல் ஆணைய அலுவலகத்தை காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டனர். பிஹார் தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி நடத்தினர். அவர்களை கலைக்க போலீஸார் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். உத்தராகண்ட் தலைநகர் டேராடூனில் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற காங்கிரஸார் தடுத்து நிறுத்தப்பட்டனர். அசாம் மாநிலம் குவஹாட்டியில் தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி காங்கிரஸார் பேரணியாகச் சென்றனர். அந்த மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் பேரணிக்கு தலைமை வகித்தார். பஞ்சாப் தலைநகர் சண்டிகரிலும் தேர்தல் ஆணையம் நோக்கி காங்கிரஸார் பேரணி நடத்தினர். உத்தர பிரதேச தலைநகர் லக்னோ, அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகர், காஷ்மீரின் ஸ்ரீநகர், ஜம்மு, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டங்களின்போது காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். இதற்கிடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால், அக்டோபர் 2-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஜந்தர் மந்தரின் அனைத்து நுழைவுவாயில்களும் மூடப்பட்டுள்ளன.