
சென்னை, செப். 27-
சென்னை பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் படிக்கட்டு இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பட்டினப்பாக்கத்தில் நம்பிக்கை நகர், முள்ளிமா நகர், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் அரசு குடியிருப்புகளில் வசித்து, மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்பில் வசிப்பவர்களின் நண்பர் ஒருவர் இரவு 9 மணியளவில் அங்கு வந்துள்ளார். மேல்மாடியில் வசிக்கும் நண்பரைப் பார்ப்பதற்காக படிக்கட்டில் ஏறியபோது, படிக்கட்டு இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் ஓடிவந்து பார்த்தபோது, அந்த நபர் படுகாயங்களுடன் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா வெளியிட்ட அறிக்கையில், “பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகரில் பழுதடைந்த குடியிருப்புகளில் மக்கள் தினமும் உயிருக்கு அச்சத்துடன் வசித்து வருகின்றனர். குடியிருப்புகளைச் சீரமைக்க அரசு முன்வராததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் தளத்தில் படிக்கட்டு இடிந்து விழுந்ததில் இளைஞருக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதை அரசு வேடிக்கை பார்க்கிறது” எனக் கண்டனம் தெரிவித்தார்.













