
சண்டிகர், செப். 28-
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுமி, சுமார் 10 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். எனினும், மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரிதாபாத்தில் ஆழ்துளைக் கிணற்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தார். இந்தச் சம்பவம் செப். 27-ஆம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் நிகழ்ந்தது. சிறுமி கிணற்றுக்குள் விழுந்தது குறித்து இரவு 7.45 மணியளவில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரவு 9.05 மணிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர், ஹரியானா மாநில மீட்புப் படையினர், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சிறுமியை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், இன்று (செப். 28) அதிகாலை 3.50 மணியளவில் அவர் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டார். சுமார் 10 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டதால், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடையே நிம்மதி ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோதே சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நீண்ட நேர மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டும், மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம், சிறுமியின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.














