
பழநி: அக். 9-
திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே மானூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலக்கழிவுகள் கிடந்த சம்பவம் தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர் மீது கீரனூர் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலாண்டு விடுமுறை முடிந்து அக். 5-ம் தேதி பள்ளி திறக்கப்பட்டபோது, குடிநீர் தொட்டியில் மலக்கழிவுகள் போல் ஏதோ கிடப்பதைப் பணியாளர்கள் கவனித்தனர். இதுகுறித்து தலைமையாசிரியர் ஜெயக்குமாரிடம் அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தலைமையாசிரியர் பணியாளர்களை வைத்து உடனடியாக குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்தார்.
இந்த சம்பவம் குறித்து இரண்டு நாட்களுக்குப் பிறகே மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்களுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. அருவருக்கத்தக்க இந்த சம்பவத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைத்ததாகக் கூறி, பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சம்பவத்துக்குக் காரணமானவர்களை கைது செய்யக் கோரி நேற்று காலையிலும் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து விசாரணை நடத்த வந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகநாதன், வட்டாரக் கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பெற்றோருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், காலை உணவுத் திட்டத்தில் சமைக்கப்பட்ட உணவை கல்வித் துறை அதிகாரிகள் சாப்பிட்டனர். மேலும், மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரையும் குடித்தனர்.
சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து, காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். தொடர்ந்து, பள்ளி வளாகம் மற்றும் சமையல் கூடத்தை ஆய்வு செய்ததுடன், தலைமையாசிரியர், பணியாளர்களிடமும் விசாரணை நடத்தினர்.













