Home செய்திகள் உலக செய்திகள் பாரிஸில் தீவிரமடைந்த மாணவர் போராட்டம்

பாரிஸில் தீவிரமடைந்த மாணவர் போராட்டம்

பாரிஸ், அக். 9- பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கல்வித்துறைக்கான நிதிப் பற்றாக்குறை மற்றும் பள்ளிகளின் மோசமான உள்கட்டமைப்பைக் கண்டித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.பிரான்சில் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாதது, பழுதடைந்த வகுப்பறைகள், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றைக் கண்டித்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடந்த செப்டம்பர் இறுதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாரிஸில் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. வடகிழக்கு பாரிஸில் உள்ள பிரபல பள்ளி ஒன்றின் நுழைவுவாயிலில் குப்பைத் தொட்டிகளைக் குவித்து மாணவர்கள் முற்றுகையிட்டனர். இதனிடையே, பிளேஸ் டி லா ரிபப்ளிக் பகுதியில் பிரம்மாண்ட பேரணி நடத்துவதற்காக திரண்ட மாணவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர். போராட்டத்தால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, நாடு முழுவதும் 375 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்துள்ள நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 6,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.